சீரியஸ்
"ஏன் டாடி, கிராமத்திற்கு போகும்போது நீங்க மட்டும் போகக்கூடாதா? எதுக்கு எங்களையும் கூட்டிட்டு போய் போரடிக்கிறீங்க?" ஸ்டெபானி மேயரின் பிரேக்கிங் டானிலிருந்து பார்வையை விலக்கி கேட்டாள் என் பதினெட்டு வயது மகள்.
"சும்மா வாங்கம்மா; நீங்களும் பெரியவங்களா ஆகிட்டீங்க; இனிமே நல்லது கெட்டது எல்லாத்திலயும் நீங்களும்தான் கலந்துக்கணும்" பொறுமையாக விளக்கினார் என் அம்மா.
"போயிட்டு அப்படியே திரும்பி வந்துடறோம்; அப்படிதானே?" இது என் இரண்டாவது மகளின் கவலை.
"ஆமா; போறதுக்கு மூணு மணி நேரம்; அங்க ஒருமணி நேரம்; அப்படியே திரும்பி வந்துடரதுதான்" சாலையிலிருந்து பார்வையை விலக்காமல் பதிலளித்தேன்.
'"சில்ட்ரன், நாம போறது டெத் வீட்டுக்கு; அங்க வந்து சீரியசா இருக்கணும்; கிராமம் முழுக்கவே சோகமா இருப்பாங்க; நீங்க வந்து சிரிச்சிட்டு நிக்க கூடாது" எச்சரித்தாள் என் மனைவி.
"ஆமாம்மா, இது டவுன் இல்ல; கிராமம். ஒரு வீட்ல டெத்ன்னாலும், ஊரு முழுக்க அமைதியா இருக்கும். வேறொரு பக்கம் கல்யாணமே வச்சிருந்தா கூட, சைலண்டாதான் பாட்டு போடுவாங்க" என் மகள்களுக்கு கம்பாட்டிபிலாக இங்லீஷ் கலந்து அறிவுரை சொன்னார் என் அம்மா.
"ஏம்மா, பெரியப்பாவுக்கு ஒரு வீடுதானே? பெரிய அண்ணன் கல்யாணம் பண்ணிட்டு, வேற வீடு கட்டிட்டு தனியா போய்ட்டார? அல்லது சின்ன அண்ணன் எல்லாம் சேந்து கூட்டு குடித்தனமா இருக்காங்களா?" இறந்து போன பெரியப்பா குடும்பம் பற்றி பேச்சு திரும்பியது.
"ஒரே வீட்லதான் இருக்காங்க; ஆனா ரண்டா பிரிச்சிட்டாங்க, நடுவுல ஒரு சுவர் வச்சி" சோகமாக சொன்னார் என் அம்மா.
கிராமத்தில் பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆன பிறகு, சிறிய வீடாக இருந்தாலும் நடுவில் சுவர் வைத்து இரண்டாக பிரிப்பது வழக்கம்தான்.
"பெரியப்பா யார் கூட இருந்தாங்க? இப்போ பாடிய எங்க வச்சிருப்பாங்க?"
"பெரியவன் கூடதான்; பாடியும் அங்கதான் இருக்கும்"
* * * * *
ஒரு வழியாக கிராமத்தை அடைந்தோம்.
மகள்கள் அரட்டையை நிறுத்தி, முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டார்கள்.
இரண்டு வீடுகளுக்கு முன்னதாகவே காரை நிறுத்தினேன்.
நான் மாலையை எடுத்துக் கொள்ள, என் மனைவி பன்னீர்,ஊது வத்திகளை எடுத்துக் கொண்டாள்.
"முதல் வாசலா? இரண்டாவது வாசலாம்மா?"
"முதல்தான்" அதற்குள் விசும்ப ஆரம்பித்து விட்டார் அம்மா.
முதல் வாசலில் நுழைந்து, மாலை அணிவித்து விட்டு, அமைதியாக நின்று கொண்டிருந்தோம்.
சுவருக்கு அடுத்த பக்கத்தில் ஒரு நகைச்சுவை சேனல் ஓடும் சத்தமும், சிரிப்பு சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.
No comments:
Post a Comment